தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்

முகப்பு

எம்மைப்பற்றி

முகவுரை
 

மக்களாட்சி முறையை அறுபது ஆண்டுகளுக்கு மேலாக திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் இந்தியா, உலகிலேயே மிகப் பெரிய ஜனநாயக நாடுகளுள் ஒன்றாகும். மிகச் சில வளரும் நாடுகளால் மட்டுமே வலிமையான மக்களாட்சி முறையை நடத்திட முடிகிறது என்பதால் இதற்காக நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும். இந்திய தேசம் எந்த கொள்கைகள் அடிப்படையில் உருவாக்கப்பட்டதோ அக்கொள்கைகளை நிலைநிறுத்துவது இந்திய தேர்தல் ஆணையத்தின் பணியாகும். தேர்தல் ஆணையமானது பல ஆண்டுகளாக தனது நேர்மையான, அச்சமற்ற, வலிமையான மற்றும் பாகுபாடற்ற சட்டப்பூர்வமான வரம்பிற்குள் செயல்பட்டு இந்திய தேர்தல் முறையை தூய்மைப்படுத்தி  தனது நம்பகத்தன்மையை உயர்த்திக் கொண்டுள்ளதோடு மக்களாட்சியின் பாதுகாவலனாகவும் விளங்கி வருகிறது. மக்களாட்சி என்பது மக்களுக்காக, மக்களே மக்களால் ஆட்சி புரிவது என்பதால் தற்காலத்தில் பெரும்பாலான நாடுகள் மக்களாட்சி முறையினால் ஈர்க்கப்பட்டுள்ளன. மக்களாட்சியில் அரசிடமிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமல்லாது உயர்மட்ட அதிகார மையத்திலிருந்து கடைமட்ட நிர்வாகம் வரை அதிகாரப்பரவல் உறுதி செய்யப்பட வேண்டும். இதன் காரணமாகவே, மைய அரசிலிருந்து உள்ளாட்சி அமைப்பிற்கு அதிகாரம் திருப்பப்படும் வகையில் மக்களவை முதல் கிராம சபை வரை என்ற சொற்றொடர் உருவாக்கப்பட்டுள்ளது.
 

இந்திய அரசியலமைப்பில் 73 மற்றும் 74வது திருத்தங்கள் கொண்டு வந்தது. உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக பரவலாக்கப்பட்ட மக்களாட்சி நிர்வாகத்தை ஏற்படுத்துவதில் எட்டப்பட்ட ஒரு மைல்கல்லாகும் என்பதோடு பொருளாதார. சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நிர்வாகத்தை மக்களின் இல்லங்களுக்கே கொண்டு செல்வதுமாகும். மேற்கண்ட திருத்தங்களால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்களை நடத்தும் முறையானது அரசியலமைப்பின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ளது,


இந்திய அரசியலமைப்பின் 73வது திருத்தச் சட்டம் (ஊராட்சிகள்):

 1. ஒவ்வொரு ஊராட்சியிலும் கிராம சபையை உருவாக்கி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு பொது மேற்பார்வைக்கான அதிகாரங்களை வழங்கி ஒவ்வொரு ஊராட்சியின் ஆண்டு திட்டங்களை அங்கீகரிக்கவும், செயல்படுத்தவும் அதிகாரம் வழங்குதல்.

 2. மூன்று அடுக்கு ஊராட்சி முறையை உருவாக்குதல் அதாவது, மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகள் ஆகியவற்றை உருவாக்குவதை கட்டாயமாக்குதல்.

 3. நாடு முழுவதும் அனைத்து வகையான ஊராட்சிகளும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அமைப்பைக் கொண்டிருத்தல்.

 4. ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மட்டுமல்லாமல் தலைமைப் பதவிகளிலும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினர்களான ஆதி திராவிட வகுப்பினர்,  பழங்குடியினர் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளித்தல்.

 5. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலத்தை மாற்றமின்றி கண்டிப்பாக ஐந்து ஆண்டுகள் என ஒரே சீராக நிர்ணயித்தல் மற்றும் அரசியலமைப்பின்கீழ் உருவாக்கப்பட்ட தன்னிச்சையாக ஓர் அமைப்பின் அதாவது மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின்கீழ் ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்துதல்.

 6. போதுமான அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளை அளித்தல்.

 7. மாநில நிதிக் குழுவை அமைப்பதன் மூலம் வரிகள் விதித்துக் கொள்ள அதிகாரம் அளிப்பதோடு அரசு மானியங்கள் மற்றும் பங்கு ஒதுக்கீடுகளை வழங்க வகை செய்தல்.

இந்திய அரசியலமைப்பின் 74வது திருத்தச் சட்டம் (நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்):

 1. கூடுதலான செயல்பாடுகள் மற்றும் வரி விதிப்பு அதிகாரங்களைப் பிரித்தளித்தல்.

 2. மாநில அரசுடன் நிதிப்பங்கீடு.

 3. காலந்தவறாது தேர்தல்களை நடத்துதல்.

 4. ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இட ஒதுக்கீடு.

 5. நாடு முழுவதும் ஒரே மாதிரியான நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்.

 6. பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வகைப்படுத்தலுக்கான தகுதிகளை நிர்ணயித்தல்.

 7. ஒரு குடியிருப்புப் பகுதியின் அனைத்து நகர்ப்புற சேவைகளையும் அங்கு அமைந்துள்ள தொழிற்சாலையே வழங்கும் அல்லது வழங்க முன்வரும் நிலையில் மட்டுமே அத்தொழிற்சாலைப் பகுதிகளில் நகர்ப்புற குடியிருப்புகளை (Townships) ஏற்படுத்துதல்.

 8. மாவட்ட திட்டமிடுதல் குழு மற்றும் மாநகர திட்டமிடுதல் குழுக்களை அமைத்தல்.

தமிழ்நாடு அரசு, மேற்கண்ட அரசியலமைப்பு சட்ட திருத்தங்கள் இயற்றப்பட்டதைத் தொடர்ந்து முந்தைய தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1958-ஐ மாற்றியமைத்து, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ஐ இயற்றியது.  மேலும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பான பல்வேறு சட்டங்களில் தேவையான திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன.
 

புதியதாக உருவாக்கப்பட்ட ஊராட்சிகள் சட்டத்தில் ஊராட்சிகள் மூன்று வெவ்வேறான நிலைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதாவது மாவட்ட அளவில் மாவட்ட ஊராட்சியும், வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியமும், அடிமட்ட அளவில் கிராம ஊராட்சியும் (சிற்றூராட்சி) உருவாக்கப்பட்டுள்ளன.  அதாவது,  இம்மூன்று விதமான பஞ்சாயத்து அமைப்புகளும் தங்களுக்குரிய அதிகார எல்லையோடு ஒரே இடத்தில் பல்வேறு நிலைகளில் இயங்கினாலும் பலவகையான அதிகாரங்களையும், செயல்பாடுகளையும் கொண்டுள்ளன. 50,000 மக்கள் தொகை கொண்ட பகுதி ஒவ்வொன்றிலிருந்தும் மாவட்ட ஊராட்சிக்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்ட ஊராட்சிக்கும் வார்டு எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஒவ்வொரு 5000 மக்கள் தொகைக்கும் ஒரு வார்டு என்ற அளவில் ஊராட்சி ஒன்றியத்தின் பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன.  மேற்கண்ட இரு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தந்த அமைப்புகளின் வார்டு உறுப்பினர்களால் அவர்களுக்குள்ளேயே மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

 

ஒவ்வொரு கிராம ஊராட்சியின் எல்லைகளும் அதற்கான சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில் வார்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு முன்னர் ஊராட்சி எல்லைக்குள் சமமான பரவலின்றி காணப்பட்ட மக்கள் தொகை, சரியாக அமைக்கப்பெறாத தெருக்கள், சாலைகள், சந்துகள் மற்றும் குறுகிய சந்துகள், பின்னாளில் மேற்கொள்ளப்பட்ட பிளாக் முறையிலான வீடுகளுக்கு எண்ணிடும் முறை போன்ற சில சிறப்பு காரணங்களுக்காக ஒவ்வொரு சிற்றூராட்சியிலும் குடியிருப்பு பகுதி மற்றும் மக்கள் தொகை மற்றும் புவியமைப்பிற்கு ஏற்ப வார்டுகளின் எண்ணிக்கை குறைந்தபட்சமாக இரண்டாகவும் அதிகபட்சமாக ஐந்தாகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது.  எனவே, ஒவ்வொரு வார்டும் ஒரு உறுப்பினர் வார்டாகவோ அல்லது பல உறுப்பினர் வார்டாகவோ அதிகபட்சம் 3 உறுப்பினர்களை கொண்டதாக அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, அனைத்து பல்லுறுப்பினர் வார்டுகளும் ஓர் உறுப்பினர் வார்டுகளாக 2011 சாதாரணத் தேர்தலுக்கு முன்னதாக மாற்றப்பட்டன. அதன்படி ஒவ்வொரு வார்டும் ஓர் உறுப்பினர் பிரதிநிதித்துவம் கொண்டதாக உள்ளது.

 

ஒவ்வொரு சிற்றூராட்சியும் மக்கள் தொகைக்கேற்ப 6 அல்லது  9 அல்லது 12 அல்லது 15 வார்டுகள் / உறுப்பினர்களை கொண்டதாகவே உள்ளது. மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ஆகியோர் மறைமுகத்தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.  ஊராட்சிகளின் தலைவர்கள், அதாவது, கிராம ஊராட்சியின் தலைவர்கள், நேரடியாக மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதன்படி, ஊரகப் பகுதிகளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு ஒன்று, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கு ஒன்று, சிற்றூராட்சித் தலைவருக்கு ஒன்று மற்றும் சிற்றூராட்சி வார்டு உறுப்பினருக்கு ஒன்று என நான்கு பதவிகட்கு நேரடித் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.

 

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை ஒவ்வொன்றும் தங்கள் பகுதியின் அடிப்படைத் தேவைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் வகையிலான தனித்தனியான அலகுகளாகும். தற்போது தமிழ்நாட்டில் 528 பேரூராட்சிகளும், 121 நகராட்சிகளும் மற்றும் 15 மாநகராட்சிகளும் உள்ளன. மாநகராட்சி கவுன்சிலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள்  மற்றும் பேரூராட்சி் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் நேரடி தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாநகராட்சி் மேயர் / துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள் / துணை தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.


உள்ளாட்சித் தேர்தல்கள் :

பெரும்பாலும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்கீழும் அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின்படியும் பின்பற்றப்படும் பொதுத் தேர்தல் நடைமுறைகளுக்கு ஒத்தவாறே உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களுக்கான சட்டங்களும் விதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

 

பின்வரும் நேர்முகத் தேர்தல்கள் கட்சி அடிப்படையில் அல்லாமல் நடத்தப்படுகின்றன: 

 1. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும்

 2. கிராம ஊராட்சித் தலைவர்கள்

தமிழக உள்ளாட்சி அமைப்புகள் / வார்டுகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்கள்

ஊரக உள்ளாட்சி அமைப்பு

உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை

மொத்த வார்டுகளின் எண்ணிக்கை

மொத்த பதவியிடங்களின் எண்ணிக்கை

வார்டு உறுப்பினர்கள்

தலைவர்கள்

கிராம ஊராட்சி

12,524

99,324

99,324

12,524

ஊராட்சி ஒன்றியம்

388

6,471

6,471

388

மாவட்ட ஊராட்சி

31

655

655

31

மொத்தம்

12,943

1,06,450

1,06,450

12,943

 

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள்

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு

உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கை

மொத்த வார்டுகளின் எண்ணிக்கை

மொத்த பதவியிடங்களின் எண்ணிக்கை

உறுப்பினர்கள்

மேயர்கள் / தலைவர்கள்

மாநகராட்சி

15

1,064

1,064

15

நகராட்சி

121

3,468

3,468

121

பேரூராட்சி

528

8,288

8,288

528

மொத்தம்

664

12,820

12,820

664

 

ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தலைவர்கள், மாநகராட்சி மேயர்கள் மற்றும் கவுன்சிலர்கள் / வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆகிய தேர்தல்கள் கட்சி அடிப்படையில் நடத்தப்படுகின்றன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் உள்ளாட்சி வார்டு வாரியாக தயாரிக்கப்பட்டு தனித்தனியே அச்சிடப்படுகின்றன. ஆனால், அவ்வாக்காளர் பட்டியல்கள் தொடர்புடைய சட்டப்பேரவை தொகுதியின் வாக்காளர் பட்டியல்களின் பதிவுகளை பின்பற்றியே தயாரிக்கப்படுகின்றன,. உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் தயாரிப்பதற்கென தனியாக வாக்காளர் கணக்கெடுப்பு ஏதும் மேற்கொள்ளப்படுவதில்லை.

 

மேற்கண்ட நேர்முகத் தேர்தல்கள் தவிர, பின்வரும் மறைமுகத் தேர்தல்களும் நடத்தப்படுகின்றன.

 

அ) ஊரக உள்ளாட்சி அமைப்புகள் :

 1. சிற்றூராட்சி (கிராம ஊராட்சி) துணைத் தலைவர் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு சிற்றூராட்சியின் வார்டு உறுப்பினர்களால் மற்றும் அவர்களுக்குள் ;

 2. ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களால் மற்றும் அவர்களுக்குள் ;

 3. ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களால் மற்றும் அவர்களுக்குள் ;

 4. மாவட்ட ஊராட்சித் தலைவர் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களால் மற்றும் அவர்களுக்குள் ;

 5. மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களால் மற்றும் அவர்களுக்குள் ;

ஆ) நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் :

 1. மாநகராட்சி் மேயர் / துணை மேயர், நகராட்சி் மற்றும் பேரூராட்சி் தலைவர் / துணைத் தலைவர் - சம்பந்தப்பட்ட ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களால் மற்றும் அவர்களுக்குள்;

 2. மாநகராட்சியின் வார்டு குழு தலைவர்கள் - தொடர்புடைய மாநகராட்சி வார்டுகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் மற்றும் அவர்களுக்குள் ;

 3. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சட்டபூர்வ மற்றும் நிலைக்குழுக்களின் உறுப்பினர்கள் - தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களால் மற்றும் அவர்களுக்குள் ;

 4. மாநகராட்சிகளின் நிலைக் குழு தலைவர்கள் - அந்தந்த நிலைக்குழு உறுப்பினர்களால் மற்றும் அவர்களுக்குள் ;

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் :

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 1992ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 73 மற்றும் 74வது சட்டத் திருத்தங்களின்படி ஏற்படுத்தப்பட்ட சுதந்திரமான மற்றும் சட்டபூர்வ தன்னாட்சி அமைப்பான தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் மாநில தேர்தல் ஆணையரின் தலைமையின்கீழ் இயங்குகிறது.  இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 243-ZA உடன் படிக்கப்பட்ட 243-K சட்டப்பிரிவின்படி அனைத்து ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல்களும் மாநில தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டின் கீழ் நடத்தப்படுகின்றன.  தமிழ்நாட்டில் மாநில அரசால் நடத்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் மாநில தேர்தல் ஆணையத்தால், முதன் முறையாக அக்டோபர், 1996ல் எடுத்துக் கொள்ளப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சாதாரணத் தேர்தல்கள் அக்டோபர் 2001, 2006 மற்றும் 2011-ல் நடத்தப்பட்டன. இதுவரை நடத்தி முடிக்கப்பட்ட 4 சாதாரணத் தேர்தல்களும் ஒரே தடவையில் இரு கட்டங்களாக மாநிலம் முழுமைக்கும் அனைத்து விதமான பதவியிடங்களுக்கும் நடத்தப்பட்டன.


உள்ளாட்சித் தேர்தல்கள்
2011 :       

அரசியலமைப்புச் சட்டத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளவாறு சாதாரணத் தேர்தல்கள் அக்டோபர் 2011ல் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டன. பெரும் எண்ணிக்கையாக 1,32,458 பதவியிடங்கள் நேரடித் தேர்தல்கள் மூலமாகவும், 14,020 பதவியிடங்கள் மறைமுகத் தேர்தல்கள் மூலமாகவும் நிரப்பப்பட்டுள்ளன. இதைத் தவிர பல்வேறு சட்டபூர்வ /  நிலைக்குழுக்களுக்கான தேர்தல்களும் நடத்தப்பட்டுள்ளன.  நேரடித் தேர்தல்களில் 19,647 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 1,12,745 பதவியிடங்களுக்கு 4,11,765 வேட்பாளர்கள் இறுதியாக களத்தில் இருந்தனர். இத்தேர்தல்களில் ஊரக உள்ளாட்சிகளில் 60,514 வாக்குச் சாவடிகளில் 2.45 இலட்சத்திற்கு மேற்பட்ட வாக்குப் பெட்டிகளும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் 25,877 வாக்குச் சாவடிகளில் 78,903 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.  சுமார் 6.30 இலட்சம் வாக்குப் பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். ஊரகப் பகுதிகளில் அதிக அளவாக வாக்குப் பதிவு (81.81%)  சதவீதமும் நகர்ப்புறத்தில் சற்று குறைவாகவும் (72.52%) பதிவானது.  2011 உள்ளாட்சித் தேர்தலில் மொத்தத்தில் 78.80 சதவீதம் பதிவானது. இது இதற்கு முந்தைய அனைத்து  சாதாரணத் தேர்தல்களைவிட அதிகமானதாகும். ஆணையம் அனைத்து நோக்கங்களுடன் கூடிய ஒரு தெளிவான, சரியான மற்றும் நிறைவான திட்டம் தீட்டியதனால் தனது பணியினை திறம்பட முடித்து தமிழ்நாட்டில் அடிப்படை ஜனநாயக அதிகாரப்பரவலையும் மக்களாட்சி முறையையும் வலுப்படுத்தி தனது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது.


*******

 

Contents Provided and Maintained by,
Tamil Nadu State Election Commission
Chennai
Email: tnsec[at]tn[dot]nic[dot]in

Designed, developed and maintained by
National Informatics Centre
Email: webadmin[at]tn[dot]nic[dot]in
Disclaimer