தேர்தல் செலவினங்கள்
வேட்பாளர்களின் தேர்தல்
செலவின கணக்குகள் தாக்கல் :
உள்ளாட்சித் தேர்தல்களில்
போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினக் கணக்குகளைத் தாக்கல் செய்ய
வேண்டியது கீழ்காணும் சட்டங்கள் / விதிகளின்படி சட்டப்பூர்வமானதாகும்.
ஊரக உள்ளாட்சிகள் :
தமிழ்நாடு ஊராட்சிகள்
சட்டம், 1994ன் பிரிவு 37(4) மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகள்,
1995-ன் விதி 120.
நகர்ப்புற உள்ளாட்சிகள் :
தமிழ்நாடு மாவட்ட
நகராட்சிகள் சட்டம், 1920ன் பிரிவு 49(2-அ) மற்றும் தொடர்புடைய பிற நகர்ப்புற
உள்ளாட்சி சட்டப்பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பேரூராட்சிகள், மூன்றாம் நிலை
நகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் (தேர்தல்கள்) விதிகள், 2006-ன்
விதி 116.
மேற்காணும் விதிகளின்படி
தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரும், தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட
நாளிலிருந்து 30 தினங்களுக்குள் தனது தேர்தல் செலவினக் கணக்கினை தாக்கல் செய்ய
வேண்டும்.
தேர்தலில் போட்டியிடும்
ஒவ்வொரு வேட்பாளரும், தேர்தல் முடிவு வெளியிடப்பட்ட நாளிலிருந்து 30
தினங்களுக்குள் தேர்தல் செலவினக் கணக்கினை தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்பட்ட
அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேற்படி செலவினக் கணக்கு வேட்பாளரால் அல்லது
அவரது முகவரால் பராமரிக்கப்படும் கணக்கின் உண்மை நகலாக இருக்க வேண்டும்.
வேட்பாளர் ஒருவர் குறிப்பிட்ட காலத்திற்குள் தனது தேர்தல் செலவினக் கணக்கினை
தாக்கல் செய்ய தவறும் பட்சத்தில் மாநில தேர்தல் ஆணையமானது அவரை ஏன் தகுதி
நீக்கம் செய்யக்கூடாது எனக் கோரி காரணம் கோரும் தாக்கீது வழங்கும்.
இத்தாக்கீதைப் பெற்றவுடன் அவ்வேட்பாளர் கணக்கு விவரங்களையும் அக்கணக்கை
சமர்ப்பிக்காததற்கான உரிய விளக்கத்தையும் ஊரகப் பகுதியைப் பொருத்தமட்டில் 20
நாட்களுக்குள்ளாகவும் நகர்ப்புறத்தைப் பொருத்தமட்டில் 20 நாட்களுக்குள்ளாகவும்
சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த சட்டங்களின் கீழ்
அல்லது இந்த சட்டங்களினால் கோரப்படுகின்ற கால அளவு மற்றும் முறையில் தேர்தல்
செலவுகளுக்கான கணக்கு விவரத்தை நபர் ஒருவர் தாக்கல் செய்ய தவறி அவ்வாறு செய்ய
தவறியதற்கு வலுவான காரணம் அல்லது முகாந்திரம் ஏதும் இல்லையென தமிழ்நாடு மாநில
தேர்தல் ஆணையம் கருதும் பட்சத்தில் ஆணையமானது தமிழ்நாடு அரசிதழில்
வெளியிடப்படும் ஆணையின் வாயிலாக அந்தந்த நேர்விற்கேற்ப அவர் ஓர் உறுப்பினராகவோ
அல்லது தலைவராகவோ தேர்ந்தெடுக்கப்படுவதற்கான அல்லது அப்பதவியில் இருப்பதற்கான
தகுதியை அவர் இழந்ததாக விளம்பப்படுவார். மேலும், அவ்வாறு விளம்பப்படும் நபர்
இவ்வாணை வழங்கப்பட்ட தேதியில் இருந்து மூன்று ஆண்டு காலத்திற்கு தகுதி நீக்கம்
செய்யப்படுவார்.
தேர்தல் செலவின உச்ச வரம்பு
ஊரக உள்ளாட்சி அமைப்புகள் |
ரூ. |
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் |
1,70,000 |
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் |
85,000 |
கிராம ஊராட்சித் தலைவர் தேர்தல் |
34,000 |
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் |
9,000 |
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் |
ரூ. |
பேரூராட்சி
மற்றும் மூன்றாம் நிலை நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் |
17,000 |
நகராட்சி வார்டு
உறுப்பினர் தேர்தல் (இரண்டாம் மற்றும் முதல் நிலை) |
34,000 |
நகராட்சி வார்டு
உறுப்பினர் தேர்தல் (தேர்வு மற்றும் சிறப்பு நிலை) |
85,000 |
மாநகராட்சி வார்டு
உறுப்பினர் (சென்னை மாநகராட்சி தவிர) தேர்தல் |
85,000 |
சென்னை மாநகராட்சி
வார்டு உறுப்பினர் தேர்தல் |
90,000 |
******* |