வேட்பாளர்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவை
செய்யக்கூடியவை
  1. ஒரு வேட்பாளர் தேர்தல் சட்டங்கள், விதிகள், நடைமுறைகள் மற்றும் அறிவுரைகளை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

  2. வேட்பாளர், அவர் போட்டியிடும் உள்ளாட்சி (அ) வார்டின் வாக்காளர் பட்டியல் நகலினை வைத்திருக்க வேண்டும்.

  3. போட்டியிட முடிவெடுப்பதற்கு முன்பாகவே வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் மற்றும் விவரங்கள் சரியாக வெளியிடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

  4. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்பாக வேட்பாளருக்கான தகுதிகள், தகுதியின்மைகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். மேலும், அவர் முழுத்தகுதிகள் பெற்றிருப்பதையும் தகுதி நீக்கத்திற்கான எந்த ஒரு சட்டக்கூறுக்கும் உட்படவில்லை என்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். தகுதியின்மை ஏதுமிருப்பின் வேட்பு மனு பரிசீலனை நாளுக்கு முன்னர் உரிய தகுதிகளுக்கு தன்னை உடையவராக்கிக் கொள்ளல் வேண்டும்.

  5. வேட்பு மனு உரிய சாற்றுரைகள் / பிரமாணங்களுடன் ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு படிவம் 3-A-லும் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு படிவம் 4-லும் முறையாக பூர்த்தி செய்யப்படுவதுடன் சரியான முறையில் கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட நாள் அல்லது அதற்கு முன்னதாகவே வேட்பு மனு வேட்பாளரால் அல்லது முன்மொழிபவரால் தாக்கல் செய்யப்படல் வேண்டும்.

  6. முன்மொழிபவரது பெயர் வார்டு தேர்தலாக இருப்பின் தொடர்புடைய வார்டுக்கான வாக்காளர் பட்டியலிலும், தலைவர் தேர்தலாக இருப்பின் அந்தந்த நேர்விற்கேற்ப தொடர்புடைய உள்ளாட்சிக்கான வாக்காளர் பட்டியலிலும் இடம் பெற்றிருப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

  7. வேட்பாளர் விரும்பினால் வெவ்வேறு முன்மொழிபவர்கள் மூலம் நான்கு வேட்பு மனுக்கள் வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனுக்கள் தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தேர்தல் அறிவிப்பில் நிர்ணயிக்கப்பட்ட இடம், நாள் மற்றும் நேரத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

  8. வேட்பு மனு உறுப்பினர் வார்டு (அ) தலைவர் என ஏதாவது ஒரு பதவிக்கு மட்டுமே அந்தந்த நேர்விற்கேற்ப தாக்கல் செய்யப்பட வேண்டும்.

  9. வேட்பு மனுவுடன் காப்புத் தொகையினை பணமாக செலுத்த வேண்டும் அல்லது செலுத்தப்பட்டமைக்கான இரசீது இணைக்கப்பட வேண்டும்.

  10. வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டதற்கான இரசீது மற்றும் வேட்பு மனு பரிசீலனைக்கான அறிவிப்பை தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

  11. வேட்பாளர் குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட இடத்தில் வேட்புமனு பரிசீலனை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும். பரிசீலனைக்குப் பின்னர், வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதையும், அவரது பெயர் பட்டியலில் சேர்க்கப்பட்டதையும் வேட்பாளர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

  12. சின்னம் ஒதுக்கீட்டிற்கான “A” மற்றும் “B” படிவங்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் தாக்கல் செய்யப்பட வேண்டும். தவறும்பட்சத்தில் குறிப்பிட்ட சின்னம் ஒதுக்கீடு செய்யக் கோரும் வேட்பாளரது கோரிக்கை ஏற்கப்பட மாட்டாது.

  13. வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை குறித்தான அறிவிப்புகளை வேட்பாளர் பெற்றுக் கொள்ள வேண்டும்.

  14. தேர்தல் முகவர் நியமனம் குறித்தான விண்ணப்பம் உரிய படிவத்தில் தயாரிக்கப்பட வேண்டும்.

  15. வாக்குச் சாவடிப் பட்டியலின் பிரதி ஒன்றினை பெற்றுக் கொள்ள வேண்டும்.

  16. ஒரு வேட்பாளர் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கான வாக்குச் சாவடி முகவரை உரிய படிவத்தில் விண்ணப்பித்து நியமிக்கலாம்.

  17. வாக்குச் சாவடி முகவர்களின் பயன்பாட்டிற்கென குறிப்பிட்ட வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலின் பிரதி ஒன்றினை வழங்கலாம்.

  18. வாக்காளர்களுக்கு வேட்பாளரால் அடையாளச் சீட்டு ஏதும் வழங்கப்படின், அச்சீட்டில் வாக்காளரது பெயர், வாக்காளர் பட்டியலின் வ.எண். / பாகம் எண் ஆகியவை மட்டுமே இடம் பெற வேண்டும். சின்னமோ, வேட்பாளரது பெயரோ அல்லது வேறு பிற கோரிக்கையோ இடம் பெறக்கூடாது.

  19. வேட்பாளர் விரும்பினால், மேசை ஒன்றுக்கு ஒருவர் என்ற வீதம் வாக்கு எண்ணுகை முகவர்களை நியமிக்கலாம்.

  20. ஒரு வேட்பாளர் வாக்கு எண்ணுகையை நேரடியாக பார்வையிடலாம்.

  21. வேட்பாளர்கள் பரிசு, உத்தரவாதம், கோரிக்கை அல்லது அச்சுறுத்தல் ஏதும் தராமல் வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டலாம்.

  22. சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்கு வேட்பாளர் உதவிகரமாகவும், ஒத்துழைப்புடனும் இருத்தல் வேண்டும்.

  23. வேட்பாளர் தனது தேர்தல் செலவினக் கணக்கினை உரிய படிவத்தில் முறையாகப் பராமரித்து தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து 30 நாட்களுக்குள் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தாக்கல் செய்திட வேண்டும்.


செய்யக்கூடாதவை

ஒரு வேட்பாளர் அல்லது அவரது முகவர் கீழ்கண்ட செயல்களில் ஈடுபடக்கூடாது.

  1. எந்தவொரு வேட்பாளர் போட்டியிடுவதையும் தடுத்தல், எந்த ஒரு வாக்காளரையும் வாக்களிக்குமாறு அல்லது வாக்களிக்காமல் இருக்குமாறு வற்புறுத்துதல் அல்லது சகவேட்பாளரை விலகி கொள்ளுமாறு வற்புறுத்துவது ஆகிய சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடக்கூடாது.

  2. அமைதியாக நடைபெறும் தேர்தலை குலைக்கும் வகையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது.

  3. வாக்கு சேகரிக்கும் நோக்கத்தில் அல்லது வாக்குப்பதிவை குலைக்கும் நோக்கத்தில் மதசார்புடைய சின்னங்களை நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ பயன்படுத்தியும் சமூக மற்றும் சாதி அடிப்படையான உணர்வுகளைப் பயன்படுத்தியும் ஆதரவு திரட்டக்கூடாது.

  4. ஏற்கனவே காணப்படும் வேறுபாடுகளை மீண்டும் ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது அதிகப்படுத்தும் விதமாகவோ செயல்படுதல் அல்லது சாதி, சமூக, மத அல்லது மொழி அடிப்படையில் பல்வேறு தரப்பினரிடையே வெறுப்புணர்வு அல்லது இறுக்கத்தை ஏற்படுத்தும் விதமாகவோ அல்லது அதிகப்படுத்தும் விதமாகவோ செயல்படுதல் கூடாது.

  5. பிற வேட்பாளரது தனிப்பட்ட குணம் அல்லது நடத்தை குறித்து அவரது தேர்தல் வெற்றி வாய்ப்பினைப் பாதிக்கும் நோக்கோடு விமர்சித்தல் கூடாது.

  6. வாக்காளர்கள் வாக்குச் சாவடிக்கு செல்வதற்கோ அல்லது திரும்புவதற்கோ போக்குவரத்து வசதிகள் மற்றும் சாதனங்களை வேட்பாளர் பயன்படுத்துவது அல்லது ஏற்பாடு செய்வது கூடாது.

  7. ஒவ்வொரு தேர்தலுக்கும் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் செலவின உச்ச வரம்பினை (வேட்பாளர்கள் தேர்தல் செலவினங்கள்) மீறுதல் கூடாது.

  8. எந்த ஒரு வேட்பாளருக்கு ஆதரவாகவோ அல்லது வாக்காளர்களை கவரும் வகையிலோ அரசு அலுவலர்களது சேவையை பயன்படுத்தக் கூடாது.

  9. வாக்குச் சாவடிக்கு உள்ளே அல்லது வெளியே சட்டத்திற்கு புறம்பான வகையில் எவ்வகையிலும் நடந்து கொள்வது மற்றும் நேரடியாக அல்லது மறைமுகமாக குழப்பத்தையோ அல்லது வன்முறையையோ ஏற்படுத்துவது கூடாது.

  10. வாக்குப் பதிவு நாள் அல்லது வாக்குப் பதிவிற்கு முந்தைய இரண்டு நாட்களில் பொதுக் கூட்டமோ (அ) ஊர்வலமோ நடத்தக்கூடாது.

  11. பிற வேட்பாளர்களது பிரச்சாரம் அல்லது கூட்டங்களில் இடையூறு விளைவிப்பது மற்றும் வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டருக்குள் முகாம்கள் அமைப்பது அல்லது பிரச்சாரம் செய்வது கூடாது.

  12. தேர்தல் தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரால் வெளியிடப்படும் அறிவுரைகள் / அறிவிப்புகளை திருத்தவோ, மாற்றவோ அல்லது கிழிக்கவோ கூடாது.

  13. வாக்குச் சாவடியிலிருந்து வாக்குச் சீட்டினை எடுக்கவோ அல்லது தவறான வழியில் கைப்பற்றவோ முயலக் கூடாது.

  14. வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டினைத் தவிர வேறு எதையும் வாக்குப் பெட்டிக்குள் போடக் கூடாது.

  15. வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் விளம்பரம் / பிரச்சாரம் செய்வது கூடாது.

  16. வாக்குச் சீட்டினை அழிக்க அல்லது வாக்குச்சீட்டினை திருத்த முயல்வது அல்லது வாக்களிக்கப்பட்ட வாக்குச் சீட்டினை வாக்குப் பெட்டியில் போடும்போது எவ்வகையிலும் தடை ஏற்படுத்தக் கூடாது.

  17. வாக்குப் பெட்டியையோ (அ) அதன் மீது இடப்பட்ட முத்திரையையோ சேதப்படுத்த அல்லது சேதப்படுத்த முயலக்கூடாது.

  18. நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ ஆள் மாறாட்டத்தை ஊக்குவிக்கக் கூடாது.

  19. வாக்காளரை அச்சுறுத்துவது (அ) வற்புறுத்துவது (அ) அவர் வாக்கு செலுத்துவதை தடுப்பது ஆகிய எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது.

  20. வாக்கெடுப்புப் பகுதிகளில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்துவதும், அப்பகுதியை சுற்றி அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துவதும் கூடாது.

  21. வாக்குப்பதிவு நாளன்றும் அதற்கு 24 மணிநேரத்திற்கு முன்னதாகவும் போதையூட்டும் மதுபானங்கள் அல்லது தடை செய்யப்பட்ட வஸ்துக்கள் வழங்க அல்லது விநியோகிக்கக் கூடாது.

*****