தேர்தல் குற்றங்கள்
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவுகள் 58-72 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம், 1998 பிரிவுகள் 13-26 ஆகியவை தேர்தல் தொடர்பான குற்றங்களை குறிப்பிடுகின்றன. அவை பின்வருமாறு:-

1. தேர்தல் இரகசியத்தை மீறுதல்:
ஆறு மாத வரையிலான சிறைத்தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய தண்டனை அல்லது இரண்டும்.

2. ஆள் மாறாட்டம்:
ஆறு மாத காலத்திற்கு குறையாத மற்றும் இரண்டு வருடங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனை மற்றும் அபராதம்.

3. வகுப்பினரிடையே மதம், இனம், ஜாதி, சமூக அல்லது மொழி அடிப்படையில் பகைமை அல்லது வெறுப்புணர்வை தூண்டுதல்:
மூன்று வருடங்கள் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதத்துடன் கூடிய தண்டனை அல்லது இரண்டும்.

4. தேர்தலுக்கு முந்தைய நாள் மற்றும் தேர்தல் நாளன்று பொதுக் கூட்டம் நடத்துவது:
ரூபாய் 250/- வரையிலான அபராதம்.

5. தேர்தல் கூட்டத்தில் இடையூறு செய்தல்:
ரூபாய் 250/- வரையிலான அபராதம்.

6. துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் முதலானவற்றை அச்சிடுவதற்கான வரையறைகள்:
  1. அச்சக உரிமையாளர் மற்றும் வெளியீட்டாளரது பெயர் மற்றும் முகவரியை குறிப்பிடாமல் உள்ள எந்த ஒரு தேர்தல் துண்டுப் பிரசுரத்தையோ (அ) சுவரொட்டியையோ யாரும் அச்சிடவோ அல்லது வெளியிடவோ அல்லது அதற்கு காரணமாகவோ இருக்கக் கூடாது.

  2. நபர் எவரும் கீழ்கண்ட காரணங்கள் எதுவுமின்றி தேர்தல் துண்டுப் பிரசுரங்களையோ அல்லது சுவரொட்டிகளையோ அச்சிடவோ அல்லது அதற்கு காரணமாகவோ இருக்கக் கூடாது.
  3. (அ) தேர்தல் துண்டுப் பிரசுரம் அல்லது சுவரொட்டியை வெளியிடுபவர் தம்முடைய கையெழுத்து மற்றும் தம்மை தனிப்பட்ட முறையில் நன்கு அறிந்துள்ள இரண்டு நபர்களின் மேலொப்பத்தோடு தம்மை அடையாளம் காட்டும் வகையில் ஒரு பிரமாணத்தை இரட்டைப் பிரதிகளில் அச்சிடுபவரிடம் வழங்குதல்.
    (ஆ) அந்த ஆவணம் அச்சிடப்பட்ட பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பிரமாணத்தின் ஒரு நகலையும் அச்சிடப்பட்ட ஆவணத்தின் ஒரு நகலையும் அந்தந்த நேர்விற்கேற்ப செயல் அலுவலரிடமோ அல்லது ஆணையரிடமோ அல்லது செயலரிடமோ அனுப்பி வைத்தல்.

  4. இந்தப் பிரிவின் நோக்கங்களுக்காக:-
  5. (அ) ஓர் ஆவணத்தை கையினால் படி எடுப்பது அல்லாத பிற படிப்பெருக்கத்திற்கான எந்த முறையும் 'அச்சிடுதல்' என பொருள் கொள்ளப்படுதல் வேண்டும் என்பதோடு, 'அச்சிடுபவர்' எனும் சொல்லும் அதன்படியே பொருள் கொள்ளப்பட வேண்டும், மற்றும்
    (ஆ) "தேர்தல் துண்டுப் பிரசுரம் அல்லது சுவரொட்டி" என்பது, ஒரு வேட்பாளர் அல்லது பல வேட்பாளர்களின் தேர்தலை ஊக்குவிக்கின்ற அல்லது ஊக்குவிக்காத நோக்கத்திற்காக விநியோகிக்கப்படும் அச்சிட்ட துண்டுப் பிரசுரம் என்று பொருள்படும். ஆனால், தேர்தல் குறித்த நாள், நேரம், இடம் மற்றும் தேர்தல் கூட்டங்கள் குறித்த விவரங்கள் அல்லது தேர்தல் முகவர்கள் அல்லது பணியாளர்களுக்கு தரப்படும் சாதாரண அறிவுறுத்தல்கள் அடங்கிய கைப்பிரதிகள், விளம்பர அட்டைகள் மற்றும் சுவரொட்டிகள் இதில் அடங்காது.

  6. மேற்கண்ட (1) அல்லது (2) ஆம் உட்பிரிவின்படியான வகைமுறைகள் எவற்றையும் மீறுகின்ற நபர் எவரும், ஆறு திங்கள் வரை நீடிக்கக்கூடிய கால அளவிற்கு சிறைத் தண்டனையோ அல்லது இரண்டாயிரம் ரூபாய் வரையிலான அபராதமோ அல்லது இரண்டுமோ விதித்து தண்டிக்கப்படத் தக்கவராவார்.
7. ஒரு வேட்பாளரின் வெற்றி வாய்ப்பிற்காக பணியாற்றுதல் அல்லது எந்த ஒரு நபரையும் எந்த ஒரு வகையிலும் வாக்களிக்க வற்புறுத்துதல் அல்லது அவர் மீது தம் செல்வாக்கைப் பயன்படுத்துதல் ஆகிய செயல்களில் ஈடுபடும் அலுவலர்கள், காவல் துறை பணியாளர்கள் மற்றும் பிறர் மீது ஆறு மாதம் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

8. வாக்குச் சாவடிக்குள்ளும் அருகிலும் ஆதரவு திரட்டுவது:
வாக்குச் சாவடிக்குள் அல்லது வாக்குச் சாவடிப் பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்குள் அமைந்துள்ள எந்த ஒரு பொது அல்லது தனியார் இடத்திலும் கீழ்காணும் எந்த ஒரு நடவடிக்கையிலும் எவரும் ஈடுபடக்கூடாது.
(அ) வாக்குகளுக்காக ஆதரவு திரட்டுதல்; அல்லது
(ஆ) எந்தவொரு வாக்காளரது வாக்கினையும் கேட்டுப் பெறுதல்; அல்லது
(இ) எந்த ஒரு வாக்காளரையும் ஒரு குறிப்பிட்ட வாக்காளருக்கு வாக்களிக்கக் கூடாது என வற்புறுத்துதல் அல்லது
(ஈ) தேர்தலில் வாக்களிக்காமல் இருக்குமாறு வாக்காளர் எவரையும் வற்புறுத்துதல் அல்லது
(உ) தேர்தல் தொடர்பாக (அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அல்லாத) எந்தவொரு அறிவிப்பு அல்லது சைகையை காட்டுதல்.
இந்தக் குற்றமானது ரூ.250/- வரையிலான அபராதத்துடனான தண்டனையைக் கொண்ட பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய குற்றமாகும்.

9. வாக்குச் சாவடிகளுக்குள் அல்லது வாக்குச் சாவடிகளுக்கு அருகில் குரலினை அதிகரித்துக் காட்டும் அல்லது மீண்டும் மீண்டும் ஒலிபரப்பும் வகையிலான மெகாபோன், ஒலிபெருக்கி போன்ற கருவிகளைப் பயன்படுத்தி வாக்குச் சாவடிக்கு வருபவர்கள் மற்றும் பணியில் உள்ளோரை அச்சுறுத்தும் வகையிலோ அல்லது இடையூறு செய்யும் வகையிலோ குரலெழுப்புதல் அல்லது அவ்வாறான முறையற்ற செயல்களில் ஈடுபடுதல்:
3 மாத காலம் வரையிலான சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும்.

10. வாக்குச் சாவடியில் தவறான நடத்தை:
வாக்குப் பதிவிற்காக நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் எவரேனும் தவறாக நடந்து கொண்டாலோ அல்லது வாக்குச் சாவடி தலைமை அலுவலரின் சட்டரீதியான வழிகாட்டுதலைப் பின்பற்றத் தவறினாலோ அவ்வாக்குச்சாவடியின் தலைமை அலுவலரால் அல்லது பணியிலுள்ள காவல் துறை அலுவலரால் அல்லது இதற்கென வாக்குச் சாவடி தலைமை அலுவலரால் அதிகாரமளிக்கப்படும் எந்த ஒரு அலுவலராலும் அந்நபர் வாக்குச் சாவடியிலிருந்து வெளியேற்றப்படுவார்.
வாக்குச் சாவடியிலிருந்து வெளியேற்றப்படும் ஒரு நபர் வாக்குச் சாவடி தலைமை அலுவலரது அனுமதியின்றி மீண்டும் வாக்குச் சாவடிக்குள் நுழைந்தால் அவர் மீது 3 மாத காலம் வரையிலான சிறைத் தண்டனை (அ) அபராதம் (அ) இரண்டும் விதிக்கப்படும்.

11. தேர்தலுக்காக ஊர்திகளை சட்டத்திற்கு புறம்பான வகையில் வாடகைக்கு அமர்த்துதல் அல்லது கொள்முதல் செய்தல்:
ரூ.250/- வரையிலான அபராதம்.

12. தேர்தல் தொடர்பான அலுவல் பணிகளை மீறுதல்:
ரூ.500/- வரையிலான அபராதம்.

13. வாக்குச் சாவடியிலிருந்து வாக்குச் சீட்டுகளை அகற்றுதல் அல்லது நேர்மையற்ற முறையில் வாக்குச் சீட்டினை வாக்குச்சாவடிக்கு வெளியே எடுத்துச் செல்லுதல் அல்லது எடுக்க முயற்சி செய்தல்:
இக்குற்றம் பிடியாணையின்றி கைது செய்வதற்குரியது. அத்தகைய நபரை கைது செய்ய காவல் துறை அலுவலருக்கு கட்டளையிட வாக்குச் சாவடி தலைமை அலுவலருக்கு அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.
ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனை (அ) ரூ.500/- வரையிலான அபராதம் (அ) இரண்டும்.

14. பிடியாணையின்றி கைது செய்வதற்குரிய பிற குற்றங்கள்:
எந்த ஒரு நபரும் எந்த ஒரு தேர்தலிலும்,
(அ) நேர்மையற்ற வகையில் எந்த ஒரு வேட்பு மனுவையும் அழித்தல் அல்லது சேதப்படுத்துதல்.
(ஆ) தேர்தல் நடத்தும் அலுவலரின் அதிகாரத்திற்குட்பட்டு வெளியிடப்படும் / ஒட்டப்படும் எந்த ஒரு பட்டியல், அறிவிப்பு அல்லது பிற ஆவணங்களை நேர்மையற்ற வகையில் அழித்தல், சேதப்படுத்துதல் அல்லது அப்புறப்படுத்துதல்.
(இ) எந்த ஒரு வாக்குச் சீட்டினையோ அல்லது வாக்குச் சீட்டிலுள்ள அலுவல் முத்திரையினையோ நேர்மையற்ற வகையில் அழித்தல் அல்லது நேர்மையற்ற வகையில் சேதப்படுத்துதல்.
(ஈ) உரிய அதிகாரமின்றி எந்த ஒரு வாக்குச் சீட்டினையும் எந்த ஒரு நபருக்கும் வழங்குதல் அல்லது எந்த ஒரு நபரிடமிருந்தும் பெறுதல் அல்லது கைவசம் வைத்திருத்தல்.
(உ) வாக்குச் சீட்டினைத் தவிர்த்து வேறு எதனையும் நேர்மையற்ற முறையில் எந்த ஒரு வாக்குப் பெட்டிக்குள்ளும் போடுதல்.
(ஊ) தேர்தல் நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் எந்த ஒரு வாக்குப் பெட்டி அல்லது வாக்குச் சீட்டினை உரிய அதிகாரமின்றி சேதப்படுத்துதல், எடுத்தல், திறத்தல் அல்லது பிற வகையில் இடையூறு விளைவித்தல்.
*****