தகுதி வரன்முறைகள்

ஒரு வாக்காளருக்கான தகுதி

ஊரக / நகர்ப்புற உள்ளாட்சிகள்:

ஓர் ஊரக / நகர்ப்புற உள்ளாட்சியின் வாக்காளர் பட்டியலானது அந்த ஊரக / நகர்ப்புற உள்ளாட்சியில் அடங்கும் பகுதியை உள்ளடக்கிய தமிழக சட்டமன்றத் தொகுதிக்கென மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன்படியும், 1960-ஆம் ஆண்டின் வாக்காளர்கள் பதிவு விதிகளின்படியும் தயாரிக்கப்பட்டுள்ள மற்றும் திருத்தப்பட்டுள்ள நடப்பு வாக்காளர் பட்டியலை ஒத்ததாகும். அதாவது, ஓர் ஊரக / நகர்ப்புற உள்ளாட்சி பகுதி உள்ளடக்கிய தொடர்புடைய சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெற்றுள்ள ஒருவர் தானாகவே ஊரக / நகர்ப்புற உள்ளாட்சி வாக்காளர் பட்டியலிலும் இடம் பெறுவார். இதன் மூலம் அந்த ஊரக / நகர்ப்புற உள்ளாட்சிக்கு நடைபெறும் தேர்தல்களில் வாக்களிக்க தகுதியுடையவராகிறார்.

சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளராக பதிவு செய்திட கீழ்க்கண்ட நிபந்தனைகள் உள்ளன:-

  1. அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.

  2. அவர் தகுதிக்காக நிர்ணயிக்கப்பட்ட தேதியில் 18 வயது நிரம்பாதவராக இருக்கக் கூடாது. அதாவது, வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்படும் ஆண்டின் ஜனவரி முதல் தேதியில் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
    (தேர்தலில் போட்டியிடுவதற்கென வேட்பாளரது வயதினை அறிதலுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நாளும் வாக்காளர் தகுதிக்கான நாளும் வெவ்வேறானவை என்பதை கவனத்தில் கொள்க)

  3. அவர் வாக்கெடுப்புத் தொகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

  4. அவர் ஓர் உரிய நீதிமன்றத்தால் மனநலம் குன்றியவர் என அறிவிக்கப்பட்டிருக்கக் கூடாது.

  5. தேர்தல்களில் முறையற்ற செயல்கள் மற்றும் பிற குற்றங்கள் தொடர்புடைய எந்த ஒரு சட்டத்தின் பிரிவுகளின் கீழும் அவர் வாக்களிக்கும் தகுதியை இழந்திருக்கக் கூடாது. (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவுகள் 16 மற்றும் 19)

  6. ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிந்து கொள்ள உரிமை கிடையாது. (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-ன் பிரிவுகள் 17 மற்றும் 18).

தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவு 35 & 36 மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம், 1998 பிரிவு 12 & 32-ல் ஒரு வாக்காளர் தனது வாக்குரிமையை நிறைவேற்ற கீழ்க்கண்ட நிபந்தனைகளை வலியுறுத்துகிறது:-

  1. இந்திய குற்றவியல் சட்டம் (IPC) அத்தியாயம் IX – A-ன்படி தண்டிக்கப்படத்தக்க ஒரு குற்றச் செயலுக்காகவும் சட்டமன்ற தேர்தலுக்காக அவ்வப்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின்படியும் ஒருவர் தண்டனை பெற்றிருக்கக் கூடாது அல்லது அவ்வப்போது நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழும் தகுதியிழந்திருக்கக் கூடாது.

  2. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவு 36-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருத்தல் கூடாது மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994 பிரிவுகள் 58 முதல் 71 வரை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டம், 1998 பிரிவு 13 முதல் 26 பிரிவுகளின் கீழ் தண்டிக்கப்படத்தக்க ஒரு தேர்தல் குற்றத்திற்காக தண்டனை பெற்றிருக்கக் கூடாது.

  3. மனநலம் குன்றியவராக இருந்தாலோ உரிய நீதிமன்றத்தினால் அவ்வாறு அறிவிக்கப்பட்டவராக இருந்தாலோ மற்றும் தேர்தல் குற்றத்திற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டவராக இருந்தாலோ அத்தகைய தகுதி நீக்கம் நடைமுறையில் உள்ளவரை அவர் வாக்களிக்க தகுதியற்றவர் ஆவார்.

*****