தேர்தல்கள் நடத்துதல்
1. வாக்காளர் பட்டியல் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல் :
உள்ளாட்சி அமைப்புக்கான வாக்காளர் பட்டியலானது அவ்வுள்ளாட்சிப் பகுதிக்கு தொடர்புடைய தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதியின் நடப்பு வாக்காளர் பட்டியலை ஒத்திருத்தல் வேண்டும். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வழங்கும் அறிவுரைகளின்படி, வாக்காளர் பதிவு அலுவலரால் வாக்காளர் பட்டியல்கள் தயாரிக்கப்படல் வேண்டும்.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்திட கோரும் அல்லது பிரசுரிக்கப்பட்ட பட்டியலில் ஏதேனும் ஆட்சேபணை தெரிவிக்கும் எவரும் அவர் வாக்காளர் பதிவு விதிகள், 1960-ல் உள்ள கூறுகளின்படி உரிய கோரிக்கையை அல்லது ஆட்சேபணையை சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் அளித்திட வேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்ட கோரிக்கை அல்லது ஆட்சேபணை மீது சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரால் வழங்கப்படும் உத்திரவின்படி, உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்து தொடர்புடைய பாகத்தில் உரிய மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.
மேற்சொன்ன சேர்த்தல்கள், திருத்தங்கள் மற்றும் நீக்கல்களை உள்ளாட்சித் தேர்தல்களில் வேட்பு மனு தாக்கலுக்கு நிர்ணயிக்கப்படும் கடைசி நாள் வரை மேற்கொள்ளலாம். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அறிவுரைகளின்படி, வாக்காளர் பதிவு அலுவலர் வாக்காளர் பட்டியலை அச்சிட்டு பிரசுரிக்க வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புக்கான வாக்காளர் பட்டியலின் இரண்டு பிரதிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு இலவசமாக வழங்கப்படும். விற்பனைக்கான பிரதிகள் அந்த உள்ளாட்சியின் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் கிடைக்கும்.

2. வாக்குச்சாவடி அமைத்தல் :
அந்தந்த பகுதி வாக்காளர்கள் வாக்களிக்கும் வகையில் தேவையான எண்ணிக்கையில் வாக்குச்சாவடிகள் தேர்தல் நடத்தும் அலுவலரால் அமைக்கப்படும். தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தேர்தல் நடத்தும் அலுவலரால் ஒவ்வொரு வாக்கெடுப்புப் பகுதிக்குரிய வாக்குச்சாவடிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதலைப் பெற்றபின் வெளியிடப்படும்.

3. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தல் அறிவிப்பு வெளியிடுதல் :
அவ்வப்போது ஏற்படும் சாதாரண மற்றும் தற்செயல் காலியிடங்களை நிரப்பும் வகையில் நேரடி தேர்தல்களை நடத்தும் நோக்கில் மாநில தேர்தல் ஆணையமானது அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் குறிப்பிட்ட நாள் அல்லது நாட்களில் அந்தந்த வார்டுகளில் / உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு உறுப்பினர்கள் / தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வாக்காளர்களை அழைக்கும் வகையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிவிக்கைகளை வெளியிடுகிறது.
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் தேர்தல் அறிவிக்கையின் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் அறிவிப்பினை (தேர்தல் அட்டவணை) தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலக செய்தி பலகையிலும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி வார்டுகளில் இரண்டு அதற்கு மேற்பட்ட முக்கியமான இடங்களிலும் வெளியிட வேண்டும்.

வேட்பு மனு தாக்கல் :
வேட்பு மனு தாக்கலுக்கான தகுதிகள் :
21 வயது நிரம்பிய மற்றும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்கும் குடிமக்கள்.

முன்மொழிபவர் :
ஒரு குறிப்பிட்ட வார்டின் தேர்தலில் ஒரு வேட்பாளருக்காக முன்மொழிபவர் அந்த வார்டின் வாக்காளராக இருத்தல் வேண்டும். தலைவர் பதவிக்கான தேர்தலைப் பொறுத்தவரை முன்மொழிபவர் குறிப்பிட்ட உள்ளாட்சிப் பகுதியின் வாக்காளராக இருத்தல் வேண்டும்.

4. கால நிர்ணயம் :
தேர்தல் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்காக குறிப்பிடப்பட்டுள்ள காலத்தில் அனைத்து வேலை நாட்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கு காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களுக்கு காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரையிலும் வேட்பு மனுக்கள் பெறப்படும்.

5. வேட்பு மனு :
வேட்பு மனு படிவங்கள் அப்படிவங்களில் அச்சிடப்பட்டுள்ள விலைக்கான தொகையை வேட்பாளர்கள் செலுத்தும் பட்சத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்படும்.

6. வேட்பு மனுவை யார் தாக்கல் செய்யலாம்?
போட்டியிடும் நபர் அல்லது அவரை முன்மொழிபவரால் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட வேண்டும்.

7. வைப்புத்தொகை :
வேட்புமனு தாக்கலின்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள வைப்புத் தொகையினை ஒரு வேட்பாளர் செலுத்தியிருந்தால் அல்லது தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பணமாக செலுத்தப்பட்டிருந்தால் அல்லது வேட்பு மனுவுடன் சம்மந்தப்பட்ட உள்ளாட்சியில் அவராலோ அல்லது அவரது சார்பிலோ அத்தொகை செலுத்தப்பட்டதற்கான பற்றுகைச் சீட்டு இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே ஒருவர் முறையான வேட்பாளராக கருதப்படுவார்.

ஊரக உள்ளாட்சி வைப்புத்தொகை (ரூ.)
ஆதி திராவிடர் / பழங்குடியினர் அல்லாத வேட்பாளர்களுக்கு ஆதி திராவிடர் / பழங்குடியினர் வேட்பாளர்களுக்கு
அ) கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 200 100
ஆ) கிராம ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கு 600 300
இ) ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 600 300
ஈ) மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 1,000 500

நகர்ப்புற உள்ளாட்சி வைப்புத்தொகை (ரூ.)
ஆதி திராவிடர் / பழங்குடியினர் அல்லாத வேட்பாளர்களுக்கு ஆதி திராவிடர் / பழங்குடியினர் வேட்பாளர்களுக்கு
அ) பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 1,000 500
ஆ) நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 2,000 1,000
இ) மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு 4,000 2,000

8. வேட்புமனுவுடன் தாக்கல் செய்யப்படவேண்டிய சொத்து, கடன், கல்வித் தகுதிகள் மற்றும் குற்றப் பின்னணிகள் குறித்த உறுதிமொழி பத்திரம் :
உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில், போட்டியிடும் வேட்பாளர்களது சொத்து, கடன்கள், கல்வித் தகுதிகள் மற்றும் குற்றப் பின்னணிகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வாக்காளர்களுக்கான தகவல் பெறும் உரிமையை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 2006 சாதாரண உள்ளாட்சி தேர்தல் முதல் நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு வேட்பாளரும் தான் போட்டியிடும் ஊரக / நகர்ப்புற உள்ளாட்சிக்கான எந்த ஒரு தேர்தலிலும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யும்போது சொத்து, கடன்கள், கல்வித் தகுதிகள் மற்றும் குற்றப் பின்னணிகள் குறித்த அனைத்து முழுமையான விவரங்கள் அடங்கிய ஓர் உறுதிமொழி ஆவணத்தை ஊரக தேர்தல்களுக்கு தமிழ்நாடு ஊராட்சிகள் (தேர்தல்கள்) விதிகள், 1995, விதி 26(2-A) -ன்படி படிவம் 3-A-ல் மற்றும் நகர்ப்புற தேர்தல்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள், 2023 விதி 30 (3) (a) & (b)-ன்படி படிவம் 4-ல் முதல் நிலை மேஜிஸ்டிரேட் அல்லது நோட்டரி பப்ளிக் அல்லது உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள உறுதிமொழி ஆணையர் முன்னிலையில் பிரமாணம் எடுத்துக் கொண்டு சமர்ப்பித்திடல் வேண்டும்.
கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு போட்டியிடும் ஒரு வேட்பாளர், இத்தகவல்களை குறிப்பிட்ட படிவத்தில் உறுதிமொழிச் சான்றாக தேர்தல் நடத்தும் அலுவலர் முன்பாக சமர்ப்பித்தால் போதுமானதாகும்.

9. ஆதி திராவிட மற்றும் பழங்குடியின வேட்பாளர்களால் அளிக்கப்பட வேண்டிய உறுதிமொழிச் சான்று :
ஆதி திராவிட மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பதவியிடம் எனில், ஒரு வேட்பாளர் தான் உறுப்பினராக உள்ள குறிப்பிட்ட ஆதி திராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தையும் அவ்வினம் மாநிலத்தின் ஆதி திராவிட அல்லது பழங்குடியின இனமாக அறிவிக்கை செய்யப்பட்ட தொடர்புடைய பகுதியையும் குறிப்பிட்டு ஓர் உறுதிமொழிச் சான்றை தனது வேட்பு மனுவுடன் அளிக்க வேண்டும்.

10. பரிசீலனை :
தேர்தல் நடத்தும் அலுவலர் வேட்பு மனு பரிசீலனைக்காக அறிவிக்கப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் அதற்கென குறிப்பிடப்பட்ட இடத்தில் வேட்பு மனுக்கள் பரிசீலனையை மேற்கொள்ள வேண்டும். வேட்பாளர், அவருக்காக முன்மொழிபவரில் ஒருவர் மற்றும் அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிறிதொருவர் மட்டுமே வேட்பு மனு பரிசீலனையில் கலந்து கொள்ள முடியும். மேற்படி நபர்களுக்கு, அனைத்து வேட்பாளர்களின் வேட்பு மனுக்களையும் ஆய்வு செய்ய ஏதுவாக தேர்தல் நடத்தும் அலுவலர் போதிய வசதிகளை செய்து தர வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலர் விதிமுறைகளைப் பின்பற்றி வேட்பு மனுக்களை பரிசீலனை செய்வார். வேட்பு மனுக்கள் பரிசீலனை என்பது சட்டப்படி செல்லத்தக்க செயல்பாடாகும். வேட்பு மனு ஏற்பு அல்லது தள்ளுபடி குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரது முடிவிற்கு எதிராக மேல்முறையீடு ஏதும் கிடையாது. தேர்தல்கள் முடிந்தபின்பு உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தேர்தல் வழக்கு மனு மூலமாக மட்டுமே அவரது முடிவு குறித்து வினவ முடியும்.

11. வேட்பு மனுவை திரும்பப் பெறுதல் :
வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்காக நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளில் மாலை 3.00 மணிக்குள் தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 7-லும் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 8-லும் கையெழுத்திட்டு அறிவிப்பு தருவதன் மூலம் ஒரு செல்லத்தக்க வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டவர் தனது வேட்பு மனுவை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கண்ட அறிவிப்பை ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 7-லும் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 8-லும் பெற்றுக் கொள்ளும்போது மேற்கண்ட அறிவிப்பில் அதனை பெற்ற நாள் மற்றும் நேரத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் குறித்தல் வேண்டும்.
வேட்பு மனுவைத் திரும்பப் பெறும் அறிவிப்பை வேட்பாளர் நேரிடையாகவோ அல்லது வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை அவர் சார்பாக அளிக்க வேட்பாளரால் எழுத்து மூலமாக அதிகாரம் அளிக்கப்பட்ட அவரது முன்மொழிபவரோ தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அளிக்க வேண்டும்.
அனைத்து வேட்பாளர்களது வேட்பு மனுக்களின் பரிசீலனை முடிவடைந்த பின்னரே அல்லது வேட்பு மனு திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள்வரை ஒரு வேட்பாளர் தனது வேட்பு மனு திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பை அளித்திடலாம்.
ஒரு வேட்பாளர் தனது மனுவினை முறையாக திரும்பப் பெற்ற பிறகு அதனை இரத்து செய்ய அனுமதிக்கப்படவும் வேட்பாளராக தொடரவும் இயலாது.

12. போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் :
போட்டியிடும் வேட்பாளர்களது பட்டியலை ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 9-லும் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 10-லும் அகர வரிசைப்படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்களோடு வேட்பு மனுவை திரும்பப் பெற நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளில் மாலை 3.00 மணிக்குப் பின்னர், உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தயாரிக்க வேண்டும். செல்லத்தக்கதாக அறியப்பட்ட வேட்பு மனுக்களது வேட்பாளர்கள் மற்றும் குறிப்பிட்ட காலத்திற்குள் வேட்பு மனுவைத் திரும்ப பெறாத வேட்பாளர்கள் ஆகியோரது பெயர்கள் இப்படிவத்தில் இடம் பெறும்.

13. வாக்குச்சீட்டுகள் :
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும் அறிவுரைகளின்படி தேர்தல் நடத்தும் அலுவலரால் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்படும். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 9-லும் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 10-லும் உள்ளவாறே போட்டியிடும் வேட்பாளர்களது பெயர்கள், அவர்களது தனித் தனி சின்னங்களோடு வாக்குச்சீட்டுகள் அச்சிடப்படும். பல்வேறு தேர்தல்களுக்கான வாக்குச்சீட்டுகளின் நிறங்கள் பின்வருமாறு:-

வ. எண். தேர்தல்கள் நிறம்
1. பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் வெள்ளை
2. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் வெள்ளை / நீலம்
3. கிராம ஊராட்சி தலைவர் தேர்தல் இளஞ்சிவப்பு
4. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் பச்சை
5. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தல் மஞ்சள்
கட்சி அடிப்படையில் அல்லாத தேர்தல்களுக்கான வாக்குச்சீட்டுகளில் சின்னங்கள் மட்டுமே இடம் பெறும். போட்டியிடும் வேட்பாளர்களது பெயர்கள் இடம் பெறாது.

14. மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் :
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் விதிகள், 2023 விதி 75 முதல் 106 ஆகியவைகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை பயன்படுத்துதல் தொடர்பாக சட்டப்பூர்வ வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன.

15. வாக்குப்பதிவு :
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்படும் நாள் மற்றும் நேரத்தில் வாக்குப் பதிவுக்காக நிறுவப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்குச்சீட்டின் எதிரிதழில் கையொப்பம் பெறப்பட்ட பின்னர் வாக்காளருக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படும்.
வாக்குச்சாவடியில் வாக்காளரால் நேரிடையாக வாக்களிக்கப்பட வேண்டும். வாக்காளருக்குப் பதிலாக வேறு எவரும் வாக்களிக்கக் கூடாது.

16. வாக்குகள் எண்ணுகை :
தேர்தல் நடத்தும் அலுவலரால் தேர்தல் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் இடத்தில் வாக்கு எண்ணுகை நடைபெறும்.
தேர்தல் நடத்தும் அலுவலரின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதலின்படி வாக்கு எண்ணுகை நடைபெறும்.
வேட்பாளர், அவரது தேர்தல் முகவர் மற்றும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நிர்ணயிக்கப்படும் எண்ணிக்கையிலான எண்ணுகை முகவர்கள் மட்டுமே எண்ணுகையின்போது உடனிருக்க உரிமையுள்ளவர்கள் ஆவர்.

17. தேர்தல் முடிவுகள் வெளியிடுதல் :
வாக்கு எண்ணிக்கை முடிவு பெற்றவுடன் அதிக செல்லத்தக்க வாக்குகள் பெற்ற வேட்பாளரை வெற்றி பெற்றவராக தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பார்.
தேர்தல் நடத்தும் அலுவலர் தேர்தல் முடிவினை அறிவித்தவுடன் வெற்றி பெற்ற வேட்பாளருக்கு ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 25, படிவம் 26 மற்றும் படிவம் 27-ல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 26, படிவம் 27 மற்றும் படிவம் 28-ல் தேர்தலுக்கான சான்றினை உரிய ஒப்புதலைப் பெற்றுக் கொண்டு வழங்குவார்.
போட்டியில்லாத தேர்தலைப் பொறுத்தமட்டில் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுதலுக்கான நேரம் முடிந்த பின்னர் இருக்கும் ஒரே வேட்பாளரை வெற்றி பெற்றதாக அறிவித்து ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 25, படிவம் 26 மற்றும் படிவம் 27-ல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு படிவம் 26, படிவம் 27 மற்றும் படிவம் 28-ல் உரிய தேர்தலுக்கான சான்றினை தேர்தல் நடத்தும் அலுவலர் வழங்குவார்.

18. சாதாரணத் தேர்தல்களில் வெற்றி பெற்ற வேட்பளர்கள் பதவி ஏற்றல் :
வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்பதற்காக தேர்தல் அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள தேதிகளில் அதற்கான கூட்டங்கள் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் மேற்கொள்ள வேண்டும்.

19. மறைமுகத் தேர்தல்கள் :
பதவி ஏற்பதற்காக குறிப்பிடப்பட்ட நேரத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பதவி ஏற்றவுடன் மாவட்ட ஊராட்சி / ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர்கள் பதவியிடங்களுக்கும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் மேயர் / துணை மேயர் மற்றும் தலைவர் / துணைத் தலைவர் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலரால் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

20. நிலைக்குழு மற்றும் சட்டப்பூர்வ குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களுக்கான தேர்தல் :
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்படும் நாளில் நிலைக்குழு மற்றும் சட்டப்பூர்வ குழுக்களின் உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நடத்தப்படும் மறைமுகத் தேர்தல்களுக்கான கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலரால் நடத்தப்பட வேண்டும்.

*****