அடிக்கடி கேட்கப்படும் வினாக்கள்

1. தேர்தல் பணிக்குழு

1. மாநகராட்சி, நகராட்சி மற்றும் பிற உள்ளாட்சிகளில் தேர்தல்களை நடத்தும் அதிகாரம் படைத்த அமைப்பு எது?

இந்திய அரசியலமைப்புச் சட்டம் (73வது மற்றும் 74வது திருத்தங்கள்) சட்டம், 1992-ன்படி மாவட்ட ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், கிராம ஊராட்சிகள், மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரம் ஒவ்வொரு மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாநில தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
 

2. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரின் தகுதி நிலை என்ன?

மாநில தேர்தல் ஆணையரின் தகுதி நிலை, பணியில் உள்ள ஓர் உயர்நீதிமன்ற நீதியரசரின் தகுதி நிலைக்கு நிகரானதாகும்.
 

3. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரை நியமிப்பது யார்?

மாண்புமிகு ஆளுநர், தமிழ்நாடு அவர்கள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கிறார்.
 

4. மாநில தேர்தல் அலுவலர்கள் எவர்?

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் ஆணையர்/இயக்குநர், பேரூராட்சிகளின் ஆணையர்/இயக்குநர் மற்றும் நகராட்சி நிர்வாகத்தின் ஆணையர்/இயக்குநர் ஆகியோர் மாநில தேர்தல் அலுவலர்கள் ஆவர்.
 

5. மாவட்ட அளவில் தேர்தல்களை நடத்திடுவதற்குப் பொறுப்பான அலுவலர் யார்?

மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட அளவிலான தேர்தல் பணியை கண்காணிப்பார்.
 

6. மாநில தேர்தல் அலுவலர்களையும் மாவட்ட தேர்தல் அலுவலர்களையும் நியமிப்பவர் யார்?

மாநில தேர்தல் அலுவலர்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நியமிக்கிறது.
 

7. எந்தவொரு உள்ளாட்சியிலும் தேர்தலுக்கு பொறுப்பான அலுவலர் யார்?

ஓர் உள்ளாட்சி அமைப்பின் தேர்தலை நடத்துவதற்கு தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் தேர்தல் நடத்தும் அலுவலர் பொறுப்பாவார்.
 

8. தேர்தல் நடத்தும் அலுவலரை நியமிப்பவர் யார்?

தேர்தல் நடத்தும் அலுவலரை மாவட்ட தேர்தல் அலுவலர் நியமிக்கிறார்.
 

9. தேர்தல் பார்வையாளர்களை நியமிப்பவர் யார்?

தேர்தல் பார்வையாளர்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நியமிக்கிறது.
 

10. உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர் யார்?

ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், மாநகராட்சிகளின் ஆணையர்கள் (சென்னை மாநகராட்சியினைப் பொறுத்தவரை வருவாய் அலுவலர்) ஆகியோர் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்கள் ஆவர்.
 

11. வாக்குச் சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களை நியமிப்பவர் யார்?

வாக்குச் சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப் பதிவு அலுவலர்களை தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கிறார்.



2. வாக்காளர் பட்டியல்

1. உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்குப் பொறுப்பானவர் யார்?

ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்பிற்கும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பதிவு அலுவலரே வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்குப் பொறுப்பாவார். ஊராட்சிக்கு ஊராட்சி ஒன்றிய ஆணையரும், பேரூராட்சிக்கு பேரூராட்சியின் செயல் அலுவலரும், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு சம்பந்தப்பட்ட ஆணையர்களும் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆவர்.
 

2. வாக்காளர் பட்டியலில் பெயரைப் பதிவு செய்திட தகுதியான குறைந்த பட்ச வயது என்ன?

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் தேதியில் 18 வயதை பூர்த்தி செய்யும் எவரும் தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் தனது பெயரை வாக்காளராக பதிவு செய்து கொள்ள தகுதியுடையவர் ஆவார்.
 

3. உள்ளாட்சி அமைப்பு வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்த்திட என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது?

உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியல், தொடர்புடைய சட்டமன்றத் தொகுதியின் நடப்பு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. தொடர்புடைய சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரின் (வருவாய் கோட்டாட்சியர்) முன்னிலையில் படிவம்-6-ல் விண்ணப்பம் சமர்ப்பித்து முதலில் பெயரை சேர்த்துக் கொள்ளவேண்டும்.

இவ்வாறாக சேர்க்கப்பட்ட பட்டியலை சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பதிவு அலுவலருக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளுக்கு முன்னதாக தருவார்.

உள்ளாட்சி அமைப்பின் வாக்குப்பதிவு அலுவலர் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களை தொடர்புடைய வார்டின் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் சேர்ப்பார்.
 

4. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திடுவதற்கான கடைசி நாள் என்ன?

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திட விண்ணப்பித்தலுக்கு கடைசி நாள் என வரையறை ஏதும் இல்லை. எனினும், தேர்தல் காலங்களில் சேர்த்தல், இணைத்தல், நீக்கல், திருத்தங்கள் போன்றவைகளுக்கான விண்ணப்பங்கள் வேட்பு மனுக்கள் பெறப்படும் கடைசி நாள் வரை ஏற்கப்படும். வேட்பு மனு பெறப்படும் கடைசி நாளுக்குப் பின்னர் தேர்தல் நடைமுறை முடியும்வரை பெறப்படும் விண்ணப்பம் தேர்தல் முடிந்தபின்னரே பரிசீலிக்கப்படும். சட்டமன்ற வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், இணைத்தல், நீக்கல், திருத்தங்கள் போன்றவை தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலிக்க வாக்குப்பதிவு அதிகாரிக்கு குறைந்தது ஏழு முழுமையான நாட்கள் தேவைப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
 

5. வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபடுதல் மற்றும் செய்யப்பட்ட பதிவுகள் மீதான ஆட்சேபணைகள் குறித்து முடிவு செய்ய மேற்கொள்ளப்படும் நடைமுறை என்ன?

வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் எந்த நேரத்திலும் அப்பட்டியலின் எப்பகுதியிலும் பெயர்கள் விடுபட்டுள்ளது குறித்த அல்லது பதிவுகள் தொடர்பான ஆட்சேபணைகள், முதலில் உள்ளாட்சி வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கு அடிப்படையாக இருக்கும் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்வதன் மூலம் நேர்செய்யப்படும்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான கோரிக்கை அல்லது ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியலில் உள்ள ஏதேனும் பதிவு தொடர்பான ஆட்சேபணை குறித்து தெரிவிக்க விரும்பும் ஒருவர் வாக்காளர் பதிவு விதிகள் 1960ன் கீழ், தொடர்புடைய சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரிடம் உரிய முறையில் தனது கோரிக்கையை அல்லது ஆட்சேபணையை சமர்ப்பிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு சட்டங்களின்படி மற்றும் மேற்படி கோரிக்கைகள் ஆட்சேபணைகள் தொடர்பாக சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலரது உத்தரவுகளின் அடிப்படையில் உள்ளாட்சி வாக்காளர் பதிவு அலுவலர் உள்ளாட்சி வாக்காளர் பட்டியலில் சம்பந்தப்பட்ட பகுதியில் மாற்றங்களை உள்ளடக்கிய திருத்தங்களை மேற்கொள்வார்.
 

6. ஒரு வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்ய இயலுமா?

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950ன் பிரிவு 17 மற்றும் 18ன்படி ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளராகப் பதிவு செய்ய இயலாது.
 

7. ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியல்களில் இரண்டு இடங்களில் அல்லது ஒன்றுக்கு மேற்பட்டு இடம் பெற்றிருந்தால், அவர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்களிக்க இயலுமா?

இல்லை. ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றிருந்தாலும் அவர் ஓரிடத்தில் மட்டுமே வாக்களிக்க இயலும்.

 

3. அரசியல் கட்சிகள்

1. அரசியல் கட்சியைப் பதிவு செய்ய அதிகாரம் படைத்தவர் யார்?

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய சட்டபூர்வ ஆணையின் வாயிலாக வெளியிடப்பட்ட தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கான சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை, 2022ன்படி தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் அவற்றிற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்களின் பட்டியல் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பட்டியல் ஆகியவற்றை தானே பதிவு செய்து அறிவிக்கை செய்து வந்தது. இந்த செயல்பாடு 2001ம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்து வந்தது.

2001ம் ஆண்டு முதல், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிக்கை / அவ்வப்போது திருத்தம் செய்யப்பட்ட உத்தரவுகளை பின்வலித்துக் கொண்டு, இந்திய தேர்தல் ஆணையத்தால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம். 1951-ன் பிரிவு 29A-ன்படி வெளியிடப்பட்டுள்ள உத்தரவின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களுக்காக அரசியல் கட்சிகளின் பட்டியல் குறித்து அறிவிக்கையை மாநில தேர்தல் ஆணையம் அவ்வப்போது வெளியிட்டு வருகிறது.
 

2. உள்ளாட்சித் தேர்தலில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளாக கருதப்படும் கட்சிகள் எவை?

இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை, 1968ன் கீழ் தேசிய கட்சியாக அல்லது தமிழ்நாட்டில் மாநில கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளே தமிழ்நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகும்.
 

3. உள்ளாட்சி தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சின்னங்கள் குறித்த பட்டியலை வெளியிடுபவர் யார்?

உள்ளாட்சி தேர்தலுக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பட்டியல், அவற்றுக்கான சின்னங்கள் மற்றும் சுயேட்சை சின்னங்களின் பட்டியலை அவ்வப்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிடும்.

 

4. தேர்தல் நடத்துதல்

1. வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி அமைப்பு பதவியிடங்கள் எவை?

ஊரக உள்ளாட்சிகளில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்கள் வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சிகளில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்கள் வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
 

2. தமிழ்நாட்டின் உள்ளாட்சி பதவியிடங்கள்/வார்டுகளின் எண்ணிக்கை தற்போது எவ்வளவு?

பதவியிடம்

இடங்களின் எண்ணிக்கை

நகர்ப்புறம்

மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள்

1,374

நகராட்சி வார்டு உறுப்பினர்கள்

3,843

பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள்

7,621

ஊரகம்

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

655

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்

6,471

கிராம ஊராட்சித் தலைவர்கள்

12,525

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்

99,327

3. உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கென ஒதுக்கீடு ஏதுமுண்டா?

ஆம். உள்ளாட்சி மொத்த பதவியிடங்களில் 50 சதவீதத்திற்கு குறையாமல் பெண்களுக்கென ஒதுக்கீடு உள்ளது.
 

4. உள்ளாட்சி தேர்தல்களில் ஒரு வாக்காளர் அளிக்கும் அதிகபட்ச வாக்குகள் எத்தனை?

ஊரக உள்ளாட்சிகளில் ஒரு வாக்காளர் நான்கு வாக்குகளும், நகர்ப்புற உள்ளாட்சிகளில் ஒரு வாக்கும் பதிவு செய்தல் வேண்டும்.
 

5. தேர்தல் அறிவிக்கை மற்றும் தேர்தல் அறிவிப்பு என்றால் என்ன?

தேர்தல் அறிவிக்கை என்பது தேர்தல் கால அட்டவணை குறித்து மாநில தேர்தல் ஆணையத்தால் அரசிதழில் வெளியிடப்படுவதாகும். மாநில தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படும் இத்தேர்தல் அறிவிக்கையைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலர்களால் அவர்களது அலுவலகங்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களது அலுவலகங்களில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும்.
 

6. உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான குறைந்த பட்ச வயது என்ன?

தொடர்புடைய உள்ளாட்சியின் வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்து 21 வயது பூர்த்தியடைந்த ஒருவர் அந்த உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் போட்டியிடலாம்.
 

7. ஒரு உள்ளாட்சி பகுதிக்குள் வசிக்காதவர் அவ்வுள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியுமா?

முடியாது. சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பில் வசிப்பவர் மற்றும் அவ்வுள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இடம் பெற்றுள்ள ஒருவர் மட்டுமே அந்த உள்ளாட்சி அமைப்பில் போட்டியிட முடியும்.
 

8. வார்டு தேர்தலில் போட்டியிடுபவர் அவ்வார்டில் வசிப்பவராக இருக்க வேண்டுமா?

வார்டு தேர்தலில் போட்டியிடுபவர் அவ்வார்டில் வசிப்பவராக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால், அவ்வார்டு அடங்கியுள்ள உள்ளாட்சி பகுதியில் வசிப்பவராகவும், அவ்வுள்ளாட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் தம் பெயர் இடம் பெற்றுள்ளவராகவும் இருத்தல் அவசியம்.
 

9. ஒரு தேர்தலில் போட்டியிடும் நபர் ஒரே நேரத்தில் எத்தனை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யலாம்?

ஒரு தேர்தலுக்கு ஒருவர் நான்கு வேட்புமனுக்களுக்கு மிகாமல் தாமாகவோ, அல்லது அவரது சார்பாகவோ தாக்கல் செய்யலாம்.
 

10. வேட்பு மனு வேட்பாளரால் மட்டுமே தாக்கல் செய்யப்பட வேண்டுமா?

வேட்பு மனுவினை வேட்பாளரோ அல்லது அவரை முன்மொழிபவரோ தேர்தல் நடத்தும் அலுவலர் / உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அதற்காக நிர்ணயிக்கப்பட்ட இடம் மற்றும் நேரத்தில் நேரடியாக தாக்கல் செய்யலாம்.
 

11. ஆதி திராவிடர் (ம) பழங்குடி இனத்தைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு தேர்தல் வைப்புத் தொகையில் சலுகை ஏதேனும் உள்ளதா?

ஆம். ஆதி திராவிடர் (ம) பழங்குடி இனத்தைச் சார்ந்த வேட்பாளர்களுக்கு தேர்தல் வைப்புத் தொகையில் 50% சலுகை வழங்கப்பட்டுள்ளது.
 

12. தேர்தலில் போட்டியிடுபவர் முன்மொழிபவராக இருக்க முடியுமா?

போட்டியிடும் ஒரு வேட்பாளர் தாம் போட்டியிடும் பதவியிடம் தவிர்த்து இதர பதவியிடங்களுக்கு தேர்தல் முன்மொழிபவராக இருக்கலாம்.
 

13. ஒரு பதவியிடத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்பவர் தனித்தனியாக வைப்புத் தொகை செலுத்த வேண்டுமா?

ஒரு பதவியிடத்திற்கு ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருப்பினும் ஒரு வேட்பு மனுக்கான வைப்புத் தொகையே போதுமானதாகும்.
 

14. வாக்குப் பதிவுக்கான கால அளவு என்ன?

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது நிர்ணயிக்கப்படும் வகையில் வாக்குப் பதிவுக்கான கால அளவு காலை 7.00 மணி முதல் மாலை 5.30 மணிக்குள்ளாக பத்து மணிநேரத்திற்கு குறையாமல் இருக்கும்.
 

15. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியில் நிறுத்தப்படும் வேட்பாளர் வாக்குப் பதிவுக்கு முன்னர் இறந்து விட்டால் ஏற்படும் பின்விளைவு என்ன?

அங்கீகரிக்கப்பட்ட ஓர் அரசியல் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் ஒரு வேட்பாளர், வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் ஊரக தேர்தலில் முற்பகல் 10.00 மணிக்கு பின்னர் / நகர்ப்புற தேர்தலில் முற்பகல் 11.00 மணிக்கு பின்னர் எந்நேரத்திலும் இறக்க நேரிட்டு வேட்புமனு பரிசீலனையில் அவரது வேட்புமனு செல்லத்தக்கதாக இருந்து அல்லது வேட்புமனுவினை திரும்பப்பெற்றிடாத ஒரு வேட்பாளர் இறக்க நேரிடும் நேர்வுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்படுவதற்கு முன்பாக இறப்பு குறித்த அறிக்கையைப் பெற்று அல்லது தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இறக்க நேரிடும் நேர்வில், வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக இறப்பு குறித்த அறிக்கையைப் பெற்று, தேர்தல் நடத்தும் அலுவலர் இறப்பின் உண்மை நிலை குறித்து தெளிவாக அறிந்து கொண்ட பின்னர் வாக்குப்பதிவை ஒத்திவைக்க உத்தரவிட்டு மாநில தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆகியோருக்கு அறிக்கையை அனுப்ப வேண்டும். தொடர்ந்து, விதிகளில் சொல்லப்பட்ட வரையறைகளுக்குட்பட்டு புதியதாக தேர்தல் நடத்தும் விதத்தில் தேர்தலுக்கான அனைத்து நடவடிக்கைகளும் மாநில தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்படும்.
 

16. தேர்தல் நாளன்று வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர்களுக்கென முன்னுரிமை ஏதும் உண்டா?

ஆண், பெண் வாக்காளர்களுக்கான ஒரு பொதுவான வாக்குச்சாவடியில், தனித்தனி வரிசையில் ஒரு பெண் வாக்காளர் அடுத்து ஒரு ஆண் வாக்காளர் என்ற முறையில் வாக்குச்சாவடிக்குள் மாற்றி மாற்றி அனுமதிக்க வாக்குச்சாவடி தலைமை அலுவலர் வழிநடத்துவார். ஒரு வாக்குச்சாவடியில் பெண் வாக்காளர்களுக்கு உதவி செய்யும் வகையில் ஒரு பெண்ணை உதவியாளராக தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது வாக்குச் சாவடி தலைமை அலுவலர் நியமித்துக்கொள்ளலாம். மேலும், பொதுவாக, பெண் வாக்காளர்களது வாக்குப்பதிவில் வாக்குச்சாவடி தலைமை அலுவலருக்கு உதவுவதோடு குறிப்பாக, தேவைப்படும் நேர்வுகளில் ஒரு பெண் வாக்காளரை சோதனையிடவும் அப்பெண் உதவியாளரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 

17. அடையாளத்தை மறுதலித்தல் என்றால் என்ன?

வாக்குச்சாவடி தலைமை அலுவலரிடம் ஒவ்வொரு மறுதலிப்பிற்கும் நிர்ணயிக்கப்பட்ட தொகையான ஊரக தேர்தலுக்கு ரூ.2/- மற்றும் நகர்ப்புறத் தேர்தலுக்கு ரூ.100/-ஐ ரொக்கமாக செலுத்தி, ஒரு நபரின் அடையாளத்தை வாக்குப்பதிவு முகவர் மறுதலிக்கலாம். விசாரணைக்குப்பின் வாக்குச் சாவடித் தலைமை அலுவலர் இம்மறுதலிப்பு உறுதி செய்யப்பட்டதாக கருதினால் அந்நபரை வாக்களிக்க தடை செய்வதோடு அவர்மீது உரிய நடவடிக்கையும் மேற்கொள்வார்.
 

18. போட்டியிடும் தேர்தல் மற்றும் போட்டியின்றி தேர்தல் என்றால் என்ன?

வேட்பு மனு பரிசீலனை மற்றும் வேட்பு மனு திரும்பப் பெறுதலுக்குப் பின்பு, ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் இருந்தால் வாக்குப்பதிவு நடத்துவது அவசியம் என்ற நிலையில் அது போட்டியிடும் தேர்தல் எனப்படும். வேட்பு மனு பரிசீலனை மற்றும் வேட்பு மனு திரும்பப் பெறுதலுக்குப் பிறகு ஒருவர் மட்டும் தகுதியுள்ள வேட்பாளராக இருக்கும் நேர்வில் வாக்குப்பதிவு தேவையில்லாத நிலையில் அது போட்டியில்லாத தேர்தலாக அமைவதோடு அவ்வேட்பாளர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.
 

19. ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்கு சென்ற பின்னர் தனது வாக்கை ஆள் மாறாட்டம் செய்து வேறொருவர் அளித்து விட்டதாக அறிய நேர்கையில் அவர் தனது வாக்கினை பதிவுசெய்ய முடியுமா?

முடியும். ஆள் மாறாட்டம் செய்து ஒருவரது வாக்கு வேறொருவரால் ஏற்கனவே செலுத்தப்பட்டிருப்பினும், வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் அவ்வாக்காளரது அடையாளம் குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு திருப்திகரமாக பதிலளிக்கும்பட்சத்தில் அவர் தமது வாக்கினை பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார். ஆனால் அவரது வாக்குச் சீட்டு ஆய்வுக்குரிய வாக்கு (Tendered Ballot) என வாக்குச்சாவடி அலுவலரால் குறியிடப்பட்டு தேர்தல் விதிகளின்படி அதற்கென உள்ள உறையில் தனியாக வைக்கப்படும்.
 

20. வாக்குப் பதிவு நாளன்று ஒருவர் தனது ஒப்புதலைத் தந்தாலும் வேறொருவர் அவரது சார்பில் வாக்களிக்க இயலுமா?

இயலாது. வாக்குப் பதிவு நாளன்று ஒருவர் தனது ஒப்புதலைத் தந்தாலும் வேறொருவர் அவரது சார்பில் வாக்களிக்க இயலாது. அவ்வாறு செய்வது ஆள் மாறாட்டம் ஆகும்.
 

21. தேர்தல் வைப்புத் தொகையை திரும்ப பெறுவதற்கான தகுதி என்ன?

ஒரு தேர்தலில் பதிவான மொத்த செல்லத்தக்க வாக்குகளில் 1/6-க்கும் மேலான வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள், வைப்புத் தொகையை திரும்பப்பெற தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பிக்க தகுதியுள்ளவர் ஆவர்.
 

22. தேர்தலில் ஒருவர் தாம் விரும்பும் அளவிற்கு செலவு செய்ய இயலுமா?

விதிகளின்படி ஒரு தேர்தலுக்கென நிர்ணயிக்கப்பட்டுள்ள தேர்தல் செலவின உச்ச வரம்புக்கு மேல் ஒரு வேட்பாளர் செலவு செய்ய இயலாது.
 

23. வேட்பாளர்கள் தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?

ஆம். தேர்தல் சட்டங்களின்படி தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 30 நாட்களுக்குள் ஒரு வேட்பாளர் தனது தேர்தல் செலவு கணக்கினை தாக்கல் செய்தல் வேண்டும்.
 

24. தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாத வேட்பாளருக்கான தண்டனை என்ன?

தேர்தல் செலவு கணக்கு தாக்கல் செய்யாமை, தகுதி நீக்கத்திற்கு உட்படுவதோடு தகுதி நீக்கம் செய்யப்படும் நாளிலிருந்து மூன்றாண்டு காலத்திற்கு உள்ளாட்சிப்பதவியில் நீடிக்கவும் அல்லது உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவும் தகுதி இழப்பிற்குரியதாக்கும்.

*****